Tuesday, March 31, 2009

காதல் தந்த பரிசு 1

அன்று ஒரு மாலை. அழகான மாலை நேரம், மழைக் காற்று காதோரம் கதை சொல்லி சென்றது. சிறிது நேரத்தில் மழைத்துளிகள் என் தேகம் முழுக்க முத்தமிட வந்தது. திடீர் என்று இடி இடித்து. பயத்தில் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் சர்வினின் கைகளை இறுக்க பற்றி கொண்டேன். மயக்கும் மாலை பொழுது என்பர் இல்லை இல்லை. அவன் என்னை மயக்கிய மாலை பொழுது. அந்த மனம் மயக்கும் நேரத்தில் என் மனதையும்,பார்வையையும் அவனிடம் பறிக்கொடுத்தேன். அன்று தான் வைரமுத்துவின் "காதலித்து பார்" கவிதையை முழுதாக சுவாசித்தேன்.


சர்வினை ஒரு வருடமாக தெரியும். ஏனோ தெரியவில்லை முதல் சந்திப்பிலையே அவனுக்கு என் மீது காதல் மலர்ந்தது. அதை என்னிடம் சொல்லிய பொழுது எனக்கு அப்படி எந்த உணர்வும் உன்னிடம் தோன்றவில்லை என்று சொல்லி சர்வினின் காதலை மறுத்தேன். இருவரின் உறவும் நட்பாக தொடர்ந்தது. கடந்த ஒரு வருடத்தில் சர்வினின் பேச்சும்,செயல்களும் அவன் என்னிடம் கட்டிய அன்பு,பாசம்,காதல் இவையெல்லாம் என்னை அறியாமலே அவனை காதலிக்க செய்தது. என் காதலை முழுமையாக இந்த அந்தி சாயும் வேளையில் உணர்ந்தேன். யாரோ தோள்களில் கை வைத்தனர்.
"என்ன திவ்யா,ஒரே யோசனை. யோசனையா இல்லை கற்பனையா" என்று கிண்டல் அடித்தான்.
"அது எல்லாம் ஒன்றுமில்லை"மறுமொழி அளித்தேன்.
"அப்படினா can we go,it too late"என்றான்.
" போகலாமே".

தொடரும் ...

Monday, March 30, 2009

சந்தோசம்..!


முதல் முறையாக கதை எழுத போறேன். நிண்ட நாள் ஆசை. இது ஒரு தொடர் கதை தான். ஆனால் கொஞ்சம் பயமாக தான் இருக்கு. முதல் முறை அல்லவா. சொந்த முயற்சியில் கதை எழுத போறேன்.

இன்று நாள் வரை வெறும் கவிதை,கட்டுரை என்று எழுதிவந்தேன். கதை எழுவது முதல் அனுபவம். அனைவரும் எழுவது போல இதுவும் ஒரு காதல் கதை தான்,ஆனால் வித்தியசமான காதல் கதை. குறைகள் இருந்தால் கருத்து சொல்லி விட்டு போங்கள். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். கதையை பொறுத்து இருந்து பாருங்கள்.

Sunday, March 29, 2009

உண்மை காதலே!

நீ விலகியிருந்தால்
என் காதல் விலகி
போகாது..!
என் காதல் என்றுமே
நினைவுகளாக உன்னை
தொடரும்..!

இரு கண்களில்
தோன்றிய காதல்..
கண் இமைக்கும் நொடியில்
பிரிந்தது ஏனோ?

நீ இல்லா இரவுகள்
நிலா இல்லாத வானம்..
நீயில்லா வாழ்வு
என்றுமே எனக்கு
தொடரும் நினைவுகள்
தான்..!

என்னவனே..
உன்னுடைய வருகைக்காக
உயிர் கொண்டு
காத்திருக்கிறேன்..!
என் உணர்வுக்கு
உயிர் தந்து செல்வாயா?

Saturday, March 28, 2009

வரம் கொடு..!

உன் தோள் சாயும் உரிமையை
எனக்கு மட்டும் தந்து விடு..!
உன் காதலை நான்
ஏற்றுக் கொள்கிறேன்..

உன்னிடம் சண்டை போட்டுக்
கொண்டே வாழ அனுமதி
கொடு..!
பிரிவு என்ற சொல்லையே
மறந்து விடுகிறேன்..

நான் இறக்கும் தருணம்
உன் மடியில் இருக்க
வரம் கொடு..!
காலமெல்லாம் உன்னோடு
வருகிறேன்..

இந்த ஆசைக்கும் ஓர்
எல்லையிருக்கு..
இவையெல்லாம் நீ
மறந்து போனால்..
பரவாயில்லை உன்
நினைவுகள் மட்டும்
எனக்கு சொந்தம்..

ஆயிரம் எண்ணங்கள் 11

உணர்ச்சிகள்

வெளியே சாதாரணமாக நடமாடிக்கொண்டிருந்தாலும் உள்ளே மனதில் விதவிதமாய் எண்ணங்கள் உணர்ச்சிகளாக பொங்கிப் பிரவகிப்பதை நாம் எல்லோருமே உணர்ந்திருப்போம். வாழ்வும் வாழ்வதாலும் ஏற்படும் பலவிதமான மனநிலைகளை,வடிவங்களான இந்த உணர்ச்சிகளை நாம் அனுபவித்த அளவிற்கு அறிந்து கொள்வதில்லை. அடையாளம் காண்பதுமில்லை.

உணர்ச்சிகள் உயிருள்ளவரை உடனிருக்கும். இந்த உணர்ச்சிகள் நம் உணர்வின் அறிமுகத்துடன் பேச்சாகவோ,எழுத்தாகவோ,செயலாகவோ வெளிவரலாம். உணர்ச்சிகள் இல்லாமல் மனிதர் இயக்கம் இல்லை. நாம் எப்போது உணர்ச்சிகளின் தொடர்புகளை இழக்கிறோமோ அப்போதே மனிதத் தன்மையையும் இழக்கிறோம். உலகமெங்கும் உணர்ச்சிகள் பொதுவாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் உள்ளே உணர்ச்சிகள் விதவிதமாய் உருவாகின்றன. அச்சம்,கோபம்,ஆசை,சோகம்,மகிழ்ச்சி என்று பாதிப்புகளை நாம் உணர்ந்துக் கொள்கிறோம். சிலருக்கு அச்சமும் சோகமும் அதிகமானால் பல விதங்களில் அனுபவிக்க இயலும். மகிழ்ச்சியும் சிரிப்பும் அவர்களிடம் அவ்வளவாக இருக்காது. உணர்ச்சிகளை உருவாக்குவதில் வாழ்க்கை கட்டங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு மனநிலையும் முக்கியம்.

எல்லா உணர்ச்சிகளையும் அனுபவித்து உணர்ந்து அவற்றை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தவனே வாழ்க்கையில் வெற்றியடைகிறான். சில தீவீரமான பாதிப்புகள் வாழ்வில் நிகழும்பொழுது உணர்ச்சிகள் தீவிரமாகவே தாக்குகின்றன. குற்ற உணர்வு போல மனதை பிழிந்து வாழ்க்கையை உருக்குலைக்கும் உணர்ச்சி எதுவும் இல்லை. குற்ற உணர்வை முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும். குற்ற உணர்வில் இருந்து விடுபடுவது மிகவும் அவசியம். இல்லை என்றால் வாழ்க்கையும் இந்த குற்றமெனும் உணர்வின் நிழலில் இருளில் கலந்துவிடும். இதிலிருந்து மீள எளிய வழிகள் மூன்று.

- குற்றத்தை ஒப்புக்கொள்வது: நம்மை பற்றி நம் நேர்மையைப் பற்றி நமக்குள்ளேயே ஒரு பெருவிதம் உருவாகும்.
- தவறினை சரி செய்ய முடிந்தவரை முயல்வது.
- மன்னிக்கப்படுதல் அவமானம் என்று கருதாமல்,நடந்ததை விட்டு நடப்பதில் கவனம் செலுத்துதல்.

உணர்ச்சிகள் இயல்பானவை என்பதால் அவை உருவாவதை நாம் தடுக்க முடியாது. நியாயமான உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டாலே வாழ்க்கை சுலபமாகிவிடும்.

Thursday, March 26, 2009

காதலை தேடி..!


காலம் மாறும் பொழுது
என் காதல் மறைவது
சாத்தியமே!
நான் இரசித்திட நிலா
தோன்றாமல் வானம்
இருட்டறையில்
கிடந்தாலும், உன்னை
என் மனம் மறக்காதடி..

ரோஜா மலரின்
மணம் எங்கும் காற்றில்
தவழ்ந்து கொண்டு
தான் இருக்கும்..
அதே போல் உன்
நினைவும் என்னுள்
என்றும் தொடர்ந்துக்
கொண்டே இருக்கும்..

பூக்கள் ஒரு முறை
தான் பூக்கும்
என் காதலும் ஒரு
முறை தான்..!
உயிர் காதலே
என் மனம் கடைசி
வரைக்கும் அலை பாய்ந்து
திரியும் உன் அன்புக்காக..!

Monday, March 23, 2009

ஆயிரம் எண்ணங்கள் 10

உன்னை அறிந்தால்

நாம் எல்லோருமே விடைகள் தேடுகிறோம்: நாமே புதிர்கள் என்பதை மறந்து. நாம் யார்,நம் புதிர் என்ன,நாமே விடைகளா , நமக்கென்று சில விடைகளா என்ற தேடல்தான் வாழ்க்கை. சில வேளைகளில் 'வாழ்க்கை ஒரு தேடல்' என்பது மனதில் முழுதாய் பதிவதில்லை.

"மாபெரும் சபைகளில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழ வேண்டும்" என்பது உந்துதல். அதை புரிந்துக் கொண்டவுடன்,நம் காரியங்கள் இலக்கு நோக்கி இருக்கிறதா, நம் நேரம் நம் லட்சியத்திற்கு முழுமையாகச் செலவிடப்படுகிறதா என்பதை தெளிவாக நாம் உணர முடியும். வாழ்வின் இலக்குகள் எப்போதுமே பெரிய விசயங்களாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சாதாரண விசயங்களாக கூட இருக்கலாம். சில நேரங்களில் சுலபமான வெற்றிகள் ஒரு பெரிய சாதனைக்குத் தடையாக அமைவதும் உண்டு.

வாழ்வில் வெற்றிகளையும் சாதனைகளையும் அடைய முதலில் நம்மை நம் அறிந்துக் கொள்ள வேண்டும். சாதனையை அடைய நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத் தெரியாதவனால் நிச்சயம் பிறருடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. இப்படித்தான் மனித மனம் இயங்கும் என்பதால் இன்று ஆசைப்படும் சாதரண விஷயங்களுக்கு வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. நாளை என்ன சாதிக்க நினைக்கிறோம் என்பதை நிர்ணயித்துக் கொள்வதுதான் முக்கியம். எது தேவை என்று தீர்மானித்துக்கொண்டு ஒவ்வொரு செயலும் அதை நோக்கி இருந்தால்,படிப்படியாக அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகி மனம் தன்னை உணர்ந்து முழுதாகி மலரும் கட்டம் சாத்தியம்.

எந்த மனித வாழ்க்கையும் முழுதாக வெற்றிகளை மட்டுமே கண்டு வரமுடியாது. இடையில் தோல்விகள் ஏற்படுவது இயல்புதான். "கையருகில் இருப்பதுதான் கண்ணருகில் உடனே படும்". உலகத்தில் எதுவும் எட்டாத தூரத்தில் இல்லை. ஏமாற்றம் இல்லை. நாம் வாழ்கையைக் காதலிக்க கற்றுக்கொள்வோம்.

Saturday, March 21, 2009

ஆயிரம் எண்ணங்கள் 9

நட்பு

பார்க்கப் பழக பலருடன் சந்தர்ப்பம் கிடைத்தாலும் சிலரே நமக்கு பிடிக்கிறது. சிலருடன் நட்பு,ஒருவருடன் காதல் என்பது மனம் செய்யும் தேர்வு. நட்பு என்பது எப்படி உருவாகிறது? முதன் முறை பார்த்துப் பேசினால் அறிமுகம். அடுத்த முறை பழக்கம். அடிக்கடி என்றானதும் அதில் ஒரு இணக்கம் தொனிக்கும். இணக்கம் காலப்போக்கில் நம்பிக்கையாய்,அன்பாய் பரிணாமிக்க அதுவே நட்பாகிறது. நட்பு என்பது இருவழி தொடர்பு.

நட்பு என்பது நம்பிக்கையின் அடிப்படையில் வளர்வது என்பதால் எதிர்பார்ப்பு என்பதும் நியாயமானதுதான். எதிர்பார்ப்பு என்பது புரிந்து கொள்ளக்கூடிய தன்மையுடன் இருந்தாலே நட்பு. "உடுக்கை இழந்தவன் கைபோலே அங்கே இடுக்கண்களைவதாம் நட்பு" உண்மைதான். நட்பு என்பது இயல்பாய்,காதல் போல மின்னல் போல அல்லாமல். படிப்படியாக வளரும் உறவு நிலை. நட்பு என்பது தேவை. நண்பர்கள் உள்ளவர்கள் சோகத்தில் துவண்டுவிடாமல், தோல்விகளால் உடைந்துவிடாமல் சமாளிக்க முடியும்.


கோபமானவனுடன் அல்ல; சோகமானவனிடம் பரிவுதான் வரும்,நட்பு அல்ல. அகந்தை உள்ளவனிடம் வெறுப்புதான் வரும். பின் யாருடன் நட்பு வரும்? அன்பைப் பேசி,பூன்னகைக்கும் (என்னைப் போல ) நபருடனே நமக்கு நட்பு உருவாகும் எண்ணம் தோன்றும். அதே போல் நாம் பேசுவதில் பழகுவதில் இனிமையையும் இயல்பையையும் காட்டினால் நண்பர்கள் அமைவது நிச்சயம். புன்னகையும் இனிய பேச்சுமே ஒரு வரவேற்பு தோரணம் போல,பலரையும் நம்மிடையே வரவழைக்கும். வந்தவர்களில் நிச்சயமாய் மனதுக்குப் பிடித்தவர்கள் இருப்பார்கள். நட்பு என்பது இயல்பாய் அடுத்து அமையும்.

நட்பு என்பது இருட்டில் நடக்க ஒரு விளக்கு போல ஒரு நம்பிக்கை, ஒரு தைரியம். நட்பு என்றது ஒவ்வொரு மானிடனின் வாழ்கையிலும் அவசியம் இருக்கும் ஒன்று. வாழ்வில் பல சந்தோசங்களை கொடுக்கும் அழகான உறவு நட்பு.
நட்புடன்,
வியா